உத்தரபிரதேசத்தின் சோனிபட் மாவட்டத்தின் இரண்டு மலைகளில் மிகப்பெரிய அளவிலான தங்கம் படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இங்கு படிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலவாணி மதிப்பை பாதிப்பதில் தங்கத்திற்கு பெருமளவு பங்கு உண்டு. இந்திய மக்களின் தங்கத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஆண்டுதோறும் அதிகளவு தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தால் இந்திய சந்தைகள் பெருமளவு பாதிப்பை சந்திப்பதுடன் ரூபாயின் மதிப்பும் சரிவை சந்திக்கிறது. இதனால் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்தாலும் மக்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் மத்திய அரசுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் மிக அதிக அளவில் தங்கம் இருப்பதை மத்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விந்திய மலை மற்றும் கைமூர் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் பாக்சைட், சுண்ணாம்பு, நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட ஏராளமான தாதுக்கள் உள்ளன. அதிகளவில் மின் உற்பத்தி மையங்கள் இருப்பதால் இந்தியாவின் எரிசக்தி மூலதனம் என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு முதல் இந்திய புவியியல் ஆய்வுத்துறை இங்கு தங்கம் இருப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 30 வருட தேடுதலுக்கு பிறகு இங்கு தங்கம் இருப்பதை அவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 3000 டன் அளவுக்கு தங்கம், மலைப் பாறைகளில் படிந்துள்ளதாக கூறப்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே கையிருப்பில் வைத்துள்ள 626 டன் தங்கத்தை விட இது 5 மடங்கு அதிகமாகும். சோன்பத்ராவில் வெட்டியெடுக்கப்படும் மொத்த தங்கமும் ரிசர்வ் வங்கியில் சேர்க்கப்பட்டால் இந்தியா தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 2வது இடத்திற்கு சென்று விடும். ஆனால் தற்போது இந்த தங்கத்தை வெட்டியெடுக்க ஆன்லைனில் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே நிலையில் தங்கத்தை சந்தைப்படுத்தினால் சில வருடங்களில் மொத்த தங்கமும் தீர்ந்து விடும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் இந்தியா வருடத்திற்கு சராசரியாக 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இதனால் 3000 டன் தங்கம் என்பது இந்தியா 4 வருடங்களில் இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியவுடன் பொதுமக்கள் மத்தியில் தங்கத்தின் விலை குறையும் என என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய புவியியல் துறை இது தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்கவுள்ளது. தங்கம் மற்ற தாதுப் பொருட்களின் இருப்பு குறித்த முழு விவரமும் அதன் பிறகே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post