மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
10 நாடுகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் ஆட்டம், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. சிட்னியில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்றொரு தொட்ட வீராங்கனை ஷஃபலி வெர்மா 29 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிகஸ் 26 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், தீப்தி ஷர்மா, சிறப்பாக ஆடி ரன்களை சேகரித்தார். 49 ரன்கள் எடுத்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில், இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியினர், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர். பெத் மூனி மற்றும் ரேச்சல் தலா 6 ரன்களிலும், கேப்டன் மெக் லானிங் 5 ரன்னிலும், ஜெஸ் ஜோனஸன் 2 ரன்னிலும், எல்லிஸ் பெரி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அலிஸா ஹீலி மட்டும் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா, 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை பூனம் யாதவ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில், வரும் 24 ஆம் தேதி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
Discussion about this post