திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கேரளாவிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஹேமந்த் ராஜ் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த 19 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தனி ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டதால் உயிரிழப்பு அதிகமாவது குறைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
Discussion about this post