டெல்லி முதலமைச்சராக 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைபற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா 8 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். அவருடன் மணீஷ் சிசோடியா உட்பட 6 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வாரணாசியில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால், அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாவிற்கு மற்ற எந்த கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆயினும், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஆசிரியர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பதவியேற்பு விழாவில் 1 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
Discussion about this post