கேரளாவில் கால்களால் கார் ஓட்டும் வாலிபருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிலுமோல் மரிய தாமஸ் . மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. ஆனால் தனக்கு அப்படி ஒரு குறை இருப்பதை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தனது கால் மூலம் கார் ஓட்டக்கற்றுக்கொண்டுள்ளார். கால்களை பயன்படுத்தி மிக இயல்பாக கார் ஓட்டத்தொடங்கிய இவரது அபார திறமையை கண்ட அவரது நண்பர்கள் அவருக்கு புது கார் ஒன்றை வாங்கி கொடுத்தனர்.
இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்று இடுக்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஜிலுமோல் விண்ணப்பித்தார். ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி கால்களால் வாகனம் ஓட்டுவது குற்றம் என்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தனக்கு கார் ஓட்ட உரிமம் வழங்க உத்தரவிடவேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஜிலுமோல் மரிய தாமசின் மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் அவருக்கு உரிமம் வழங்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து ஜிலுமோல், வாகனம் ஓட்டும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தனக்கு அடுத்த வாரம் ஓட்டுனர் உரிமம் கைக்கு வந்து விடும், மன்னிக்கவும் காலுக்கு வந்து விடும் என்று ஜிலுமோல் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
Discussion about this post