கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 19 பேரும், குரூப் 4 முறைகேட்டில் 16 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களான கார்த்திக், செந்தில்குமார், சாபுதீன் ஆகிய மூவரும் இன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில்ராஜ் ஆகியோர் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் தலா 7 லட்ச ரூபாய் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Discussion about this post