திருவள்ளூர் அருகே பிறந்த நாள் விழாவில் பட்டாக்கத்தியால் பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியதாக புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார் ஒன்று வந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமாரின் என்பவரின் பிறந்த நாள் விழாவை அந்த கிராமத்தின் முக்கிய சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியது தெரியவந்தது. மேலும் பொதுஇடத்தை வழிமறித்து இப்படி செய்கிறீர்களே என்று கேட்டவர்களை ஆபாசமாக பேசியதுடன் கேக் வெட்டுவதற்கு பதில் உன்னை வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பட்டாக்கத்தியால் கேக் வெட்டும்போது உடனிருந்த கல்லூரி மாணவன் நரேன் மற்றும் அஜித்குமார்,கலைவாணன், விஜய், பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீதும் புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தப்பியோடிய மற்ற 3பேரை தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமலிருக்க காவல்துறையினர் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post