பேஸ்புக், யூ டியூப், லின்க்ட் இன், டுவிட்டர் – ஆகிய 4 சமூக வலைத்தளங்கள் ஒரு கைபேசி செயலிக்கு எதிராகத் திரண்டு உள்ளன.
சட்ட அமலாக்கம் தொடர்பான ஒரு கைபேசி செயலியே கிளியர் வியூ ஏஐ ஆகும். சந்தேக வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய இந்த செயலி பயன்பட்டு வருகின்றது. இதனால் சட்ட அமலாக்கத்தில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஆகியவையும் அடங்கும்.
இந்த கிளியர் வியூ செயலி தனது பணிகளுக்காக, பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப், லின்க்ட்-இன் ஆகிய சமூகவலைத்தளங்களில் இருந்து 300 கோடிக்கும் அதிகமான புகைப்படங்களை எந்த அனுமதியும் இன்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றது. இது அந்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களின் தனியுரிமையை மீறிய செயலாக உள்ளது.
இதனால் கடந்த மாதம் டுவிட்டர் சமூக வலைத்தளம் இந்த கிளியர் வியூ செயலிக்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியது. அதில், ‘டுவிட்டரில் இருந்து படங்களை பதிவிறக்கம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும்’ – என்று டுவிட்டர் கூறியது. இந்த கடிதம் குறித்த செய்தி பிரபல ஆங்கில இதழான நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகி இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் யூ டியூபும் இந்த செயலிக்கு எச்சரிக்கை விடுத்தது. அப்போது கிளியர் வியூ செயலியின் தரப்பில், ‘இணையத்தில் பொதுவாகக் கிடைக்கும் புகைப்படங்களையே நாங்கள் பயன்படுத்துகிறோம்’ – என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், முகநூல் மற்றும் லின்க்ட் இன் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களும் தற்போது கிளியர் வியூ செயலியை எச்சரித்து உள்ளன. 4 பிரபல சமூக வலைத்தளங்கள் இணைந்து கிளியர் வியூ செயலியை நெருக்குவதால், அந்த செயலி விரைவில் தனது செயல்பாட்டை மாற்றவோ, நிறுத்தவோ வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் செயலியான கிளியர் வியூ-வின் உரிமையாளர் யார் என்பது தெரியாத நிலையில், இந்த செயலி குறித்த செய்திகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
Discussion about this post