சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமிழக முதலமைச்சராக உயர்ந்து, விவசாயிகளின் தேவைகளை நன்கு உணர்ந்து நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கனவுத் திட்டமான நவீன கால்நடைப் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு, இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் கனவுத் திட்டமான கால்நடைப் பூங்காவின் பின் உள்ள தொலைநோக்கையும் உழைப்பையும் விரிவாக விளக்குகின்றது இந்தத் தொகுப்பு.
சேலம் மாவட்டத்தின் தலைவாசல், இனி கால்நடைகளின் நுழைவு வாசல் என அழைக்கப்படலாம். ஆம் ஆசியாவிலேயே மிகப் பெரிய, சர்வதேசத் தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு, சேலம் தலைவாசலில்தான் இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதுடன் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகளையும் தொடங்கி வைத்து விவசாயிகளின் அரசு இது என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை உயர்த்திடவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இலவச ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் 38 ஆயிரத்து 500 பெண்களுக்கு இலவச நாட்டுக் கோழிகளை வழங்கி நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி பெருமை சேர்த்தார்.
இப்படியாக மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கால்நடைகளை, காப்பதும் தங்கள் பொறுப்பு என்று உணர்ந்த தமிழக அரசு கால்நடைப் பாதுகாப்பிற்கென பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகின்றது. தமிழகத்தில் தொடரும் அதிமுக அரசின் திட்டங்களால், தமிழகம் முழுவதும் எண்ணற்ற கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்பட்டு, நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் உலா வருவதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கால்நடைகளை வீடுகளுக்கே சென்று சிகிச்சையளிக்கக் கூடிய வகையில், அதிநவீன கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி சேவையையும் முதலமைச்சர் பழனிச்சாமி கடந்த ஆண்டு தொடங்கி வைத்து கால்நடைகளின் உயிர்காத்து வருகிறார்.
இதுபோன்ற கால்நடைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாகவே, கால்நடைத்துறையில் வேறு எவராலும் சாதிக்க முடியாத அதிநவீன கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவையும் இன்று திறந்து வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நடந்த கூட்டத் தொடரில், பிப்ரவரி மாதம் 13 ம் தேதியன்று 110 விதியின் கீழ் இந்தக் கனவுத் திட்டத்தை அறிவித்த முதல்வர், இதற்கென 396 கோடி ரூபாய் நிதியையும் உடனடியாக ஒதுக்கினார்.
அதனைத் தொடர்ந்து லண்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூயார்க் மற்றும் கலிபோர்னியா நகரங்களில் கால்நடைப் பண்ணைகளைப் பார்வையிட்டு, கால்நடைகளின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களையும் முதலமைச்சர் அறிந்து வந்ததில் அவரது ஈடுபாடு வெளிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து பல்வேறு கட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி விரிவான ஏற்பாடுகளை முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துச் சென்றார்.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 900 ஏக்கரில் அமைய உள்ள நவீன கால்நடைப் பூங்காவுக்கான 564 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவில் தற்போது கால்நடைப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
கால்நடைகள்தான் விவசாயிகளின் செல்வங்கள், அந்த செல்வங்கள் நிலைத்துத் தழைக்க தமிழக அரசு கால்நடைப் பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டியுள்ள இந்த நாள் தமிழக விவசாயப் பெருமக்களின் திருவிழாவாகத் திகழ்கின்றது.
Discussion about this post