ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுக்குள் தகவல் தொடர்பு இருந்தால் அதைக் கண்காணிக்கவும் புதிய விண்வெளித் தொலைநோக்கியை ரஷ்யா உருவாக்கிவருகின்றது.
பூமியைப் போலவே உயிர்கள் வாழும் வேறு கோள்கள் உள்ளன – என்று ஒரு தரப்பினர் நீண்டகாலமாகவே கூறி வருகின்றனர். மேலும் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு அவ்வப்போது வந்து செல்வதாகவும், பூமியோடு அவர்கள் தகவல் தொடர்பில் உள்ளதாகவும்
இவர்கள் நம்புகின்றனர்.
நவீன அறிவியலில் ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு குறித்து, இதுவரை எந்த வலுவான ஆதாரமும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஏலியன்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், ஒருவேளை ஏலியன்கள் இருந்து, அவர்கள் தகவல் தொடர்பை செவியால் உணரும் ரேடியோ கற்றைகளாக அல்லாமல், கண்களால் உணரப்படும் லேசர் கற்றைகளாக அனுப்பினாலும் அவற்றைக் கண்காணிக்கும் வகையில் ஒரு புதிய விண்வெளித்
தொலைநோக்கியை ரஷ்யா வடிவமைத்து வருகின்றது.
ஸ்பெக்டர் எம் (Spektr-M) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்தத் தொலைநோக்கி குறித்துப் பேட்டியளித்த ரஷ்ய அணு இயற்பியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் பனோவ்,
அண்டத்தில் உள்ள காஸ்மிக் கதிர்களைக் கண்காணிப்பதே இந்தத் தொலைநோக்கியின் பிரதான நோக்கமாக இருந்தாலும், இதன் மூலம் பிரகாசமான ஒளிகள் மற்றும் மின்னி மறையும் ஒளிகளையும் கண்காணிக்கலாம். எனவே ஆப்டிகல் ஸ்பெக்ட்ரம் எனப்படும்
ஒளியியல் நிறப்பட்டை வழியாக வேற்றுகிரகவாசிகள் ஏதேனும் தகவல் தொடர்பை மேற்கொண்டால் நம்மால் கண்காணிக்க முடியும் என்று கூறி உள்ளார். இந்தத் தொலைநோக்கி வரும் 2027ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீப காலமாக, வேற்றுகிரக மக்கள் குறித்த சர்வதேச மாநாட்டை விரைவில் ரஷ்யா நடத்தும் என பல்வேறு அறிவியலாளர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஏலியன்களின் தகவல்தொடர்பைக் கண்காணிக்க ஒரு தொலைநோக்கியை ரஷ்யா நிறுவ உள்ளது
உலக அரங்கில் அதிக கவனத்தைப் பெற்று உள்ளது.
Discussion about this post