தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள நீலம்பூர் காளியம்மன் மற்றும் நீலியம்மன் கோயில்களில், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.500 ஆண்டுகள் பழமையான இக்கோயில்களில், கடந்த 5 தலைமுறைகளாக பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டும், தை மாத கடைசி வெள்ளியன்று, பால்குடம், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பால் காவடி நேர்த்திக்கடன் விழாவை முன்னிட்டு, 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விரதமிருந்து பல கிலோ மீட்டர் பாதயாத்திரையாக கோயிலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தைப்பூசத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூசத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அந்த வகையில், தைப்பூசத் திருவிழாவின் 9-ம் நாளில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Discussion about this post