சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில், 73 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 563ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் நேற்று ஒரே நாளில், 2 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 28 ஆயிரத்து 18 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில், நேற்று மட்டும் 73 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, போதுமான அளவில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜப்பான் தலைநகர் டோக்யோவில் வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post