மத்திய பட்ஜெட், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றினை, சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகத்தில் அமைத்திட மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்புக்கு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ள அவர், கீழடியையும் இந்த திட்டத்தில் சேர்க்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழில்நுட்பத் துறைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்க கூடிய வகையில் இந்த பட்ஜெட் திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post