கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக 6 தனி அறைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை வார்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். நோயாளிகள் தும்மும் போது வெளிவரும் நீர் திவலைகளில் கூட பரவும் இந்த வைரஸ் ஒரு சில நிமிடங்கள் உயிரோடு இருப்பதால் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலில் நேரடியாக நுரையீரலை தாக்கி நிமோனியா என்று சொல்லக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ் உடலின் மற்ற உள்ளுறுப்புகளையும் தாக்குகிறது. ஆனால் இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறந்து போவதில்லை என்றும் 85 சதவீதம் குணமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்காக 6 தனி அறைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது. அந்த அறையில், வெண்ட்டிலேட்டர், சி பேப், மாஸ்க், ஹாண்ட் சானிடைசர், தற்காப்பு கவசங்கள், 18 செவிலியர்கள், 10 புது மருத்துவ நிபுணர்கள், 20
பணியாளர்கள்தயார் நிலையில் இருக்கின்றனர்.
பொதுமக்கள் இந்த வைரஸ் மூலம் எந்த ஒரு பதட்டமோ பீதியோ அடைய தேவையில்லை. கைகளை சுத்தமாக கழுவி, முகத்தில் மாஸ்க் அணிந்து, பாதுகாப்பாக இருந்தாலே போதுமானது என்றும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post