தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 3வது நாளாக 2 கிராம மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்பரை துப்பாக்கியால் சுடுவதும், விரட்டி அடிப்பதும், சிறைபிடிப்பதும், மீனவர்களின் படகுகளை சிறைப்பிடிப்பதும் தொடர்கதையாகி வந்தன. இதனால், பல ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக பேச்சவார்த்தை நடைபெற்று வந்தன. ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தை நடைபெறும்போதும், நல்லண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, அடுத்தடுத்த சில நாட்களில் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் , இலங்கை கடற்படையால் மீண்டும் மீண்டும் சிறைப்பிடிக்கப்படுவது தொடர் கதையாகி வந்தது. இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் அளவுக்கு, அந்த பிரச்சனை பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது.
தற்போது தமிழக மீனவர்கள் புதிய வடிவிலான பிரச்சனையை கடந்த சில நாட்களாக எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் நாகூர் மீனவ கிராமத்தில் இருந்து கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அவர் உட்பட 6 மீனவர்கள் அதிகாலை கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்து, அவர்களை பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நாகூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலை, கை, கால்களில் அரிவாள் வெட்டு விழுந்து; கை, கால்கள் முறிந்தது. இந்த தாக்குதலில் அந்த மீனவர் படகிலேயே ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தார்.
மீனவர்களை தாக்கி விட்டு, படகில் இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன், வலை, புளுடூத் உள்ளிட்ட கருவிகளை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள், நாகை துறைமுகம் திரும்பிய நிலையில், படுகாயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்கொண்டிருந்த செருதூரை சேர்ந்த 3 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில், அவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே படுகாயமடைந்த மீனவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, கடற்கொள்ளையர்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் அவர் உறுதி அளித்தார். மீனவர்கள் தாக்கபடுவது குறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தமிழக கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து பணியை தீவிர படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், இலங்கை சிங்கள மீனவர்கள்தான் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதனிடையே, ஒரே வாரத்தில் நாகை மீனவர்கள் சிங்கள கடற்கொள்ளையர்களால் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவம், தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழக மீனவர்களை தாக்கியது கடற்கொள்ளையர்களா அல்லது மாறுவேடத்தில் வரும் இலங்கை கடற்படையினரா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Discussion about this post