மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத் தான் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார்.
எம்ஜிஆர். மூன்றெழுத்து மந்திரம். தொட்டதெல்லாம் வெற்றி. நினைத்ததை எல்லாம் செய்து முடித்த ரசவாதி. உண்மையான மக்களாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்திய அரசியல் நாயகன். ஆனால் அவரது அரசியல் வாழ்வு அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. துரோகங்களையும், தோல்விகளையும் எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை நாயகன். கட்சி துவங்கிய நாள் முதல் அந்திம காலம் வரை அவரது அரசியல் வாழ்க்கை என்றென்றும் ஏறுமுகம் தான். தமிழ்நாட்டின் பொற்கால அரசியல் சரித்திரத்தை சற்றே திரும்பி பார்ப்போம்..
1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை சந்திக்கிறார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவரை இருகரம் ஏந்தி வரவேற்று அன்புடன் அரவணைத்துக் கொண்டார் அண்ணா. காரணம், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை முழுமையாக அறிந்தவர் அண்ணா. 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணாவின் ஆணையை ஏற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 1958-ல் அப்போதைய பிரதமர் நேரு தமிழகம் வந்தபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடும் என்று கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்களில் எம்ஜிஆரும் ஒருவர். 1959-ல் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெருதெருவாக பிரசாரம் மேற்கொண்டு திமுக வெற்றிபெற காரணமானார்.
1962-ல் தமது மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத் தான் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார். அந்த கொள்கைபிடிப்பும், நெஞ்சுரமும் தான் மக்கள் திலகத்தை புரட்சித் தலைவராக உயர்த்தியது. அந்த தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி வரிசையில் அமர எம்ஜிஆர் தான் முழுமுதற்காரணம். அதற்கு கிடைத்த பரிசுதான் எம்ஜிஆருக்கு எம்எல்சி பதவி. ஆனால் துரோகிகளின் பொறாமை பேச்சுக்களை அடுத்து பதவியை துச்சமென தூக்கி எறிந்த மாண்பாளர் எம்ஜிஆர்.
1967- சட்டமன்ற தேர்தலில் பரங்கிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் எம்ஜிஆர். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் திடீரென சுடப்பட்டார். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சுவரொட்டிகளாக தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாமலேயே தொகுதி மக்களை சந்திக்காமலேயே மகத்தான வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக ஆனார். அந்த தேர்தலில் 137 இடங்களை கைப்பற்றி பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்ததால் அண்ணா தர விழைந்தும் அமைச்சர் பதவியை வேண்டாமென்று கூறிய எம்ஜிஆரை கவுரப்படுத்த அமைச்சரின் அந்தஸ்துடன் கூடிய சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவியை வழங்கினார் அண்ணா.
1969-ல் அண்ணா உயிரிழந்த சூழலில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு எம்ஜிஆர் தான் விடை பகர்ந்தார். அவரது ஆதரவால் மட்டுமே கருணாநிதி முதலமைச்சர் பதவியில் அமர முடிந்தது. 1971-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற தன்னுடைய பிரசாரத்தை முன்னெடுத்தார். ஆனால் அதிகாரம் கொடுத்த மமதையில் யாரால் வெற்றி பெற்றோம் என்பதை மறந்த கருணாநிதி தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்தார். ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற கொள்கை பிடிப்பு உடைய எம்ஜிஆர் அதனை தட்டிக் கேட்டார். இதுபொறுக்க முடியாத கருணாநிதி 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி எம்ஜிஆரை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.
1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆதரவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். கருப்பு சிவப்பு கொடியின் நடுவே அண்ணாவின் உருவம் பதிக்கப்பட்டு அதிமுகவின் கொடி உதயமானது.
1973-ல் மே மாதம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. கட்சி உருவாகி ஆறே மாதத்தில் அதனை எதிர்கொண்டது அதிமுக. அந்த தேர்தலில் தான் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் அறிமுகமானது. எம்ஜிஆர் அடையாளம் காட்டிய அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
1974-ல் நடைபெற்ற கோவை மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதுமட்டுமல்ல, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ராமசாமி முதலமைச்சரானார்.
1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 130 இடங்களை கைப்பற்றியது அதிமுக. 1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்ஜிஆர். 4.7.77- அன்று முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதன் நினைவாகவே, தான் பயன்படுத்திய கார்கள் அனைத்திற்கும் 4777 என்ற எண்ணையை பயன்படுத்தினார். 1980-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி துணையுடன் அதிமுக அரசு கவிழ்க்கப்பட்டது. ஆனாலும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் எம்ஜிஆர். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடல் வரிகள் அவருக்கு மட்டுமே பொருந்தும்.
1984-ம் ஆண்டு முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. அப்போது உடல்நலம் குன்றியிருந்த எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருந்தும் அவர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது.
1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி மண்ணுலகை ஆண்ட மக்கள் திலகம் விண்ணுலகை ஆள தன் இன்னுயிரை ஈந்து மறைந்தார். அந்த சரித்திர நாயகனின் நூற்றாண்டு நிறைவில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம் என உறுதி ஏற்போம்..
Discussion about this post