எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டை ரவுடி போல் செயல்படுகிறார். அவருக்கு தலைமைப் பண்பு என்பதே சுத்தமாக இல்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை, வடபழனியில் பாஜக சார்பில், குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வீடுகளில் உள்ளோர், சாலைகளில் செல்வோருக்கு துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்த நாட்டில் உள்ள யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்படவில்லை என்றார். மேலும், தமிழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை சில சமூக விரோதிகள் தாக்கியதற்கு ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவரிடம், தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுக்கப்பட்டுள்ளது குறித்து அநாகரிகமான முறையில் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் சொன்ன ஹெச்.ராஜா, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டை ரவுடிபோல் செயல்படுகிறார் என்றும், அவருக்குத் தலைமைப் பண்பு என எதுவும் இல்லை என்றும், கருணாநிதி இறந்ததால் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின் ஒருபோதும் தமிழக முதல்வராக முடியாது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post