வேலம்மாள் கல்வி குழுமத்தில் நான்கு நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில், சுமார் 532 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலம்மாள் கல்வி குழுமம் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த கல்வி குழுமங்களில் மாணவர் சேர்க்கையின் போது அதிக நன்கொடை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை கணக்கில் காட்டப்படாமல் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, தேனி, கரூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 2 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆவணங்களை சோதனை செய்து பார்த்ததில் சுமார் 532 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post