தாய்லாந்து நாட்டில், எதிர்க்கட்சியை இலுமினாட்டிகள் இயக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் மக்களாட்சி முறைப்படி தேர்தல் நடைபெறுகின்றது. ஆனால் நடைமுறையில், மன்னர் குடும்பத்திற்கே அங்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. தாய்லாந்தின் மக்கள் தங்கள் அரசரைக் கடவுள் போலவே பார்க்கின்றனர். தாய்லாந்தின் மன்னர் குடும்பம் உலகின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று ஆகும். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் ‘பியூச்சர் பார்வர்டு கட்சி’ என்ற ஒரு கட்சி தொடங்கப்பட்டது. இளைஞர்களின் பேராதரவைப் பெற்ற அந்தக் கட்சி கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தாய்லாந்தின் மூன்றாவது பெரிய கட்சியாகவும், முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகவும் ஆனது.
இந்நிலையில், பியூச்சர் பார்வர்டு கட்சியினருக்கு இலுமினாட்டிகள் எனப்படும் ரகசியக் குழுவினருடன் தொடர்பு உள்ளதாகவும், இதுவரை ஐரோப்பாவில் மட்டுமே மன்னராட்சிகளுக்கு எதிராக சதிவேலைகளை மேற்கொண்டு வந்த இலுமினாட்டிகள் பியூச்சர் பார்வர்டு கட்சியின் மூலம் தாய்லாந்திலும் சதிவேலைகளை மேற்கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகவும், இதனால்தான் பியூச்சர் பார்வர்டு கட்சியின் சின்னம் இலுமினாட்டிகளின் தலைகீழ் முக்கோணத்தைப் போன்றே உள்ளதாகவும் – பியூச்சர் பார்வர்டு கட்சியின் மீது அடுக்கடுக்கான புகார்கள் நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து நீதிமன்றத்தில் விசாரணையும் நடந்தது. விசாரணையின் போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்த பியூச்சர் பார்வர்டு கட்சியினர், தங்கள் கட்சி எப்போதும் மன்னராட்சியை ஆதரிக்கும் கட்சிதான் – என்று நீதிமன்றத்தில் வாதம் செய்தனர். இந்த வழக்கில் பியூச்சர் பார்வர்டு கட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அந்தக் கட்சியே தடைசெய்யப்படும் என்ற நிலையில்,
நீதிமன்றம் வழக்கில் இருந்து பியூச்சர் பார்வர்டு கட்சியினரை விடுதலை செய்து உள்ளது.
ஆனால் இந்த வழக்கைத் தவிரவும், பியூச்சர் பார்வர்டு கட்சியினர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பியூச்சர் பார்வர்டு கட்சின் தலைவர் தனதோர்ன் மற்றும் சில கட்சி நிர்வாகிகள் இதற்கு முன்பு ‘மன்னராட்சி எதிர்ப்பு’ இயக்கங்களில் பங்கு பெற்றதாக தகவல்கள் உள்ளன. இதனால் பியூச்சர் பார்வர்டு கட்சி இன்னும் நெருக்கடியில் இருந்து முழுமையாக மீளவில்லை.
ஐரோப்பா கண்டத்திற்கு வெளியே, ஒரு நாட்டில் இலுமினாட்டிகள் தொடர்பான சிக்கல் ஏற்படுவது இதுவே முதன்முறை என்பதால் உலக நாடுகளின் கவனம் தாய்லாந்தின் பக்கம் திரும்பி உள்ளது.
Discussion about this post