நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் மற்றும் நெல் கொள்முதல் அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது புகார் வந்தால் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தஞ்சையை அடுத்த மடிகை கிராமத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நெல் ஈரப்பதம் குறித்தும் நெல் மூட்டைகளின் எடை அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், இதுவரை தினமும் 800 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், இனி நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post