தமிழ் மொழியின் எல்லாச் சொற்களையும் ஒரே நிரலில் கற்பதற்கு சொற்குவைத் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. 2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது ந.நித்தியானந்த பாரதிக்கும், 2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ந.இராமச்சந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கும், பேரறிஞர் அண்ணா விருது முனைவர் கோ.சமரசத்திற்கும், காமராஜர் விருது கவாலியர் முனைவர் மா.சு.மதிவாணனுக்கும், மகாகவி பாரதியார் விருது பேராசிரியர் முனைவர் ப.சிவராஜிக்கும் வழங்கப்பட்டது.. பாவேந்தர் பாரதிதாசன் விருது த.தேனிசை செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.. முன்னதாக விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் மொழியின் மகுடமாய்த் திகழும் திருக்குறளின் பெருமைகளையும் எடுத்துரைத்தார். தமிழின் அனைத்துச் சொற்களையும் ஒரே இடத்தில் கற்கும் விதத்தில் தமிழ்குவை திட்டத்தை தனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். நிறைவாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் , மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று திருக்குறளின் பெருமையை ரத்தினச் சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.
Discussion about this post