தமிழகத்தில் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில், 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சம் பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமான நிலையங்கள் என ஆயிரத்து 625 இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலம் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ இல்லாத நிலையை தமிழகம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, போலியோ சொட்டு மருந்து முகாமை பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Discussion about this post