பிளக்ஸ் சேலஞ்ச் எனப்படும் புதுவகை போட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூ ப்ளக்ஸ் சேலஞ்ச் என்றால் என்ன?
ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பிறகு உலகத்தின் ஏதாவது மூலையில் நடக்கும் வித்தியாசமான சவால்கள் இணையத்தில் வைரலாக்கப்படுகின்றன. அத்தகைய சவால்களைக் காணும் பல்வேறு நாடுகளின் இளைஞர்களும் இதை முயற்சி செய்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஐஸ் பக்கெட் சேலஞ்ச் துவங்கி பிட்னஸ் சேலஞ்ச் வரை இப்படித் தான் இணைய உலகில் வைரலானது. ஐஸ் பக்கெட் சேலன்ஜில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஐஸ் பக்கெட் சேலன்சில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கீகீ சவால் பிரபலமானது. காரை அப்படியே ரோட்டில் நகர விட்டு காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும் என்பதே விதி. இதுபோன்ற செய்கையால் விபத்துகள் அதிகளவில் நடைபெற்றன. மேலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால் பல்வேறு நாடுகளும் இதற்கு தடை விதித்தன. இந்தியாவிலும் பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்தி கிகி சேலஞ்ச்சில் ஈடுபட்டு அடிவாங்கிய இளைஞர்களை மறக்க முடியாது. இதையடுத்து வந்தது தான் பிட்னஸ் சேலஞ்ச். பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி எனப் பல்வேறு பிரபலங்களும் இந்த சவாலில் ஈடுபட்டு அதை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்த வரிசையில் தற்போது புதிதாக பிளக்ஸ் சேலஞ்ச் என்ற ஒன்று பிரபலமாகி வருகிறது. இந்த சவால் விதிகளின் படி தரையில் குப்புற படுத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் கைகளின் உதவி இல்லாமல் கால்களை உந்தி தள்ளி தரையில் இருந்து மேலே எழுந்திருக்கவேண்டும். உடல் உறுதிக்கு சவால் விடும் இந்தப் போட்டியில் ஒல்லியான உருவம் கொண்டவர்களும் ஜிம்னாஸ்டிக் வீரர்களும் எளிதாக எழுந்து விட சற்று பருமனானவர்கள் எழுந்திருக்க முடியாமல் திணறுகின்றனர். இளைஞர்களும் இளம் பெண்களும் சவாலில் ஈடுபட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Discussion about this post