சென்னை புழல் சிறையில் 5-வது முறையாக நடைபெற்ற சோதனையில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதன் அடிப்படையில் புழல் சிறை மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலுள்ள மத்திய சிறைகளில் சிறைத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தி, கைதிகள் பயன்படுத்திய தொலைக்காட்சி பெட்டிகள் ,செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் புழல் சிறையில் 5வது முறையாக சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து முறைகேடாக பயன்படுத்திய 29 தொலைக்காட்சி பெட்டிகள், 27 எப்.எம் ரேடியோக்கள், 18 மருத்துவமனை கட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்,4 குக்கர்கள்,பிரியாணி அரிசி,பொன்னி அரிசி, மைதா,பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சோதனையின் போது சிக்கியுள்ளது.
அந்த பொருட்களை கைதிகளுக்கு கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறை மருத்துவமனை கட்டில்கள் கைதிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டதும் தெரியவந்துள்ளது.
Discussion about this post