காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் திருநாள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் வழக்கம்போல் வெகு சிறப்பாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மெரீனா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். காவல்துறை சீருடை மட்டுமின்றி, சாதாரண உடைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கூட்டத்தில் வழி தவறும் குழந்தைகளை, உரியவர்களிடம் சேர்க்கும் நோக்கில், குழந்தைகளின் கைகளில் காவலன் காப்பு கட்டப்பட உள்ளது. அதுபோல், சிறப்பு ரோந்து வாகனங்கள், குதிரைப்படை காவலர்கள் மற்றும் சி.சி.டி.வி கேமரா கண்காணிப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post