ஆக்டோபஸ் வகையைச் சார்ந்த கணவாய் மீன்களால் முப்பரிமாண படங்களை கண்டுணர முடியும் என அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்… அது குறித்த செய்தி தொகுப்பு
உலகில் எவ்வளவோ உயிரினங்கள் உள்ளன. ஆனால் சிந்திக்க தெரிந்த உயிரினங்களில் மனிதன் முதலில் உள்ளான் எனலாம். அதேபோல் மற்ற உயிரினங்களிலும் புத்திக்கூர்மை உள்ள உயிர்கள் உள்ளன என்பது நாம் அறிந்த உண்மை.
இந்நிலையில், கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன்களுக்கு மனிதர்களை போன்று முப்பரிமாண படங்களை பார்த்தறியும் பண்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
3டி எனும் முப்பரிமாண படங்கள் என்பவை. திரையில் தெரியும் அனைத்தும் நம் கண்முன் ஏன் கண்ணுக்குள் உள்ளதாகவே சமயத்தில் தோன்றும். மெல்லுடலிகளுக்கு நம்மைப்போன்ற மெய்நிகர் அனுபவம் கிடைக்கப்பெற்றால் அவை என்ன செய்யும் என காணவிரும்பிய அமெரிக்க கடல்வாழ் உயிரின ஆய்வுக்குழு வித்தியாசமான சோதனையில் ஈடுபட்டது.
அதற்காக கணவாய் மீன்களுக்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிவித்து ஒரு காணொளியை பார்க்க வைத்தனர். அந்த காணொளி அவற்றிக்கு பிடித்தமான இறால் மீன்கள் நீந்துவது போன்று உருவாக்கப்பட்டிருந்தது.
திரையில் தெரிந்த இறால்களை உண்மை என நினைத்து கணவாய் மீன்கள் அவற்றை தாக்க தொடங்கின. இறால்களின் இயக்கத்திற்கேற்ப தங்களது தாக்குதல் முறையை மாற்றிக்கொண்டன. அதாவது அவற்றின் வெவ்வேறு கைகளால் தாக்கத் தொடங்கின.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்கள் உள்ளன, அவை கார்னியா, லென்ஸ், கருவிழி மற்றும் விழித்திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவைகள் ஸ்டீரியோப்சிஸைப் அதாவது இருவிழி இயைகோணக் காட்சி பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளன, அதாவது அவைகளால் தூரத்தை அறிய முடியும், ஏனெனில் அவைகளின் மூளை இரு கண்களிலிருந்தும் வரும் சமிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது.
ஐரோப்பிய கடல்பகுதிகளில் காணப்படும் கணவாய் மீன்களில் சிலவற்றையும் இந்த சோதனைக்கு உட்படுத்தினோம். அவைகளுக்கும் இப்பண்பு உள்ளது. மனிதர்களைப் போன்று கணவாய் மீன்களாலும் காணும் பொருளின் மூன்றாவது பரிமாண ஆழத்தை உணர முடிகிறது’ என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post