மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலையொட்டி, சென்னை மற்றும் திருச்சி நகரை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க வசதியாக 10 ரூபாய் கட்டணத்தில் நகர சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா, மாட்டுப் பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா வளாகத்தில் இருந்து தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கி மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பு வகையில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சியிலும் 10 ரூபாய் கட்டணத்தில் சுற்றுப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெக்காளியம்மன் கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் அண்ணா கோளரங்கம் ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 10 ரூபாய் கட்டணத்தில் சுற்றுலா செல்லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post