கேரளாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட, 4 அடுக்குமாடிக் கட்டங்களில் ஒரு கட்டடம் இன்று வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. மற்ற 3 கட்டடங்கள் நாளை தகர்க்கப்படும் என கொச்சி காவல்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில், உள்ளது மரடு நகராட்சி. இங்கு 343 வீடுகள் கொண்ட, நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கட்டங்கள்,கடற்கரைக்கு மிக அருகில், விதிகளை மீறிக் கட்டப்பட்டு இருப்பதால், அவற்றை இடிக்க என கேரள அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து கட்டட நிறுவனங்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மாநில அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கேரள அரசின் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, கொச்சி காவல்துறையின் மேற்பார்வையில், இன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவீன முறையில் வெடி வைக்கப்பட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அடுக்குமாடி கட்டடம் தகர்க்கப்பட்டது. நான்கு கட்டடங்களில் முதல் கட்டடம் இன்று தகர்க்கப்பட்டுள்ளது. மற்ற கட்டங்கள் நாளை தகர்க்கப்படும் என்று மரடு நகராட்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post