ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதை தடுக்கும் வகையில், அதிபர் டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. இதற்கு பழிவாங்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், அமெரிக்கா – ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுப்பதை தடுக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் குறித்து பேசிய சபாநாயகர் நான்ஸி பெலோசி, போர் அதிகார சட்டத்தின் படி, ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் போது, அதனை அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார். வாக்கெடுப்பின் போது தீர்மானத்திற்கு ஆதரவாக 224 பேரும் எதிராக 194 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பை 13 பேர் புறக்கணித்தனர். 224 பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து அதிபர் டிரம்ப் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Discussion about this post