2021-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரையாற்றிய முதலமைச்சர், உண்மைக்கு புறம்பான வதந்திகளை சிறுபான்மை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், 30 ஆண்டுகளாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருந்து வருவதையும் குறிப்பிட்டார்.
நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்த 34 ஆயிரத்து 871 நீர் நிலைகள், குடிமராமத்து பணிகள் மூலம் 2 ஆயிரத்து 182 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை வழங்கிய முதலமைச்சர் இதனை மேற்கோள்காட்டி கூறினார்.
மேலும் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் 6வது முறையாக சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தனது பதிலுரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளில் 842 கோடி ரூபாய் செலவில் 11 ஆயிரத்து 140 பாதுகாக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். பேரவையில் திமுக உறுப்பினர் ஏ.வ.வேலுவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை கூறினார்.
Discussion about this post