இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி 20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 வது 20 ஓவர் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை தொடக்க வீரர்கள் குணதிலகா 20 ரன்னிலும், ஃபெர்னாண்டோ 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குசல் பெரேரா ஓரளவு தாக்குபிடித்த நிலையில், அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 45 ரன்னிலும், ஷிகர் தவான் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தனர். 17 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய கோலி 30 ரன்களும் பண்ட் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்தியா 1 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3 வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி புனேவில் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Discussion about this post