உலகக் கோப்பை தொடரின் போது, குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாலேயே ஆட்டத்தில் தோல்வி அடைந்தோம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருபவர் ரோகித் சர்மா. கடந்த ஆண்டில் மட்டும் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 2,442 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளையும் கடந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரோடு சென்றிருந்தனர். லீக் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, அரையிறுதியில் தோல்வியை தழுவி நாடு திரும்பியது. அப்போது, இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவழித்ததால், போட்டியின் மீதான கவனம் இல்லாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுக்கவே, அவர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
தற்போது, இது குறித்து ரோகித் சர்மா பதிலளித்து உள்ளார். “நான் பல்வேறு சாதனைகள் படைப்பதற்கு தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவே காரணம் என்றும் இவர்கள் காட்டும் பாசமே, என்மீதான விமர்சனங்களை தள்ளிவைக்க காரணமாக இருக்கிறது. நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.
உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு சீனியர் வீரர்களின் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்தை கேட்டவுடன் சிரிக்க தான் செய்தேன். முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், எனது குடும்ப உறுப்பினர்களையும் இதில் தொடர்பு படுத்துவது நல்லதல்ல என்று குறிப்பிட்ட ரோகித், வாழ்க்கையில் குடும்பமே பிரதானமானது என்பதை விராட் கோலியும் நினைப்பார் என்று தெரிவித்தார்.
Discussion about this post