உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தை அளித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், முடிவுகள் முழுமையாக வெளிவர இரண்டு நாட்கள் எடுத்து கொண்டதை சுட்டிக்காட்டினார். இன்று மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளிவரும் என தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், 30 ஆயிரத்து 365 காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து மையங்களிலும் தலா 50 சிசிடிவி கேமராக்கள் வீதம் 16 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு வாக்கு சீட்டும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் முன்னிலையில் பிரித்து காட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருவதாக கூறிய அவர், திமுக தொடர்ந்துள்ள இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என வாதிட்டார். இதனையடுத்து, இந்த விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.
Discussion about this post