தமிழகத்தில் இரண்டம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. சுமார் 61 ஆயிரம் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில், ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குச் சீட்டு, மை, படிவங்கள் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 72 பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம், வீல்சேர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post