உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத, யாராலும் தடுக்கவே முடியாத அதிபயங்கர அவங்கார்டு( Avangard) ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணையை ரஷ்யா தனது ராணுவத்தில் சேர்த்துள்ளது.
ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் சென்று இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது ஹைப்பர் சோனிக் ஏவுகணை. அதிநவீன இந்த ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் மும்முரமாக ஈடுபட்டன. ரஷ்யாஅவங்கார்டு (Avangard)ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கப் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது தகவல் வெளியிட்டார். தற்போதுள்ள அனைத்து ஏவுகணைத் தடுப்புத் தொழில்நுட்பங்களையும் முறியடித்து, ஹைப்பர்சோனிக் ஏவுகணை இலக்கைத் தகர்க்கும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், (Avangard)அவங்கார்டு ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் பொருத்தப்பட்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை, ரஷ்ய ராணுவத்தின் படைக்கலத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.இது குறித்து அண்மையில் நடை பெற்ற கருத்தரங்கில் பேசிய ரஷ்யஅதிபர் புடின், ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயல்வதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யா அவங்கார்டு ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணையின் சோதனையைக் கடந்த ஆண்டிலிருந்தே நடத்தி வருகிறது. இது ஒலியை விட 20 மடங்கு அதிவேகமாகப் பாயும் திறன் படைத்தது. பூமியில் இருந்து செங்குத்தாகச் சென்று, தனது இலக்கை நோக்கி அசுர வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்து வந்து அழிக்கும். வானில் இருந்து எரிகல்லைப் போல் பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து, இலக்கைத் துல்லியமாக அழிக்கும்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இதுவரை உலகின் எந்த நாடும் தனது படைப்பிரிவில் சேர்க்கவில்லை. அமெரிக்கா, சீனா போன்ற ஆயுத உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் கூடப் பரிசோதனை முயற்சியில் தான் உள்ளன. ரஷ்யாவில் விரைவில் அதிபர் தேர்தல் வர உள்ள நிலையில் புதின் தனது ஆளுமைத் திறனை நிரூபிக்கும் நடவடிக்கையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. அதே சமயம் பருவநிலை மாற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இது போன்ற அணு ஆயுதங்கள் மனித குலத்திற்கே ஆபத்தானவை என உலகளாவிய சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Discussion about this post