90 வயது மூதாட்டி ஒருவரின் சமையலறையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு ஓவியம், சமீபத்தில் 2,200 கோடிக்கு விலை போனது. தற்போது அந்த ஓவியம் பிரான்ஸ் நாட்டின் தேசியப் பொக்கிஷமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 90 வயதான மூதாட்டி ஒருவரின் சமையலறையில் ஒரு பழைய ஓவியம் நெடுங்காலமாக இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பழைய பொருள் விற்பவர் ஒருவர் அந்த ஓவியத்தைக் கவனித்து அதன் மதிப்பை பரிசோதனை செய்யச் சொன்னார்.
அது என்ன ஓவியம் என்றே தெரியாத உரிமையாளர், அதனை மதிப்பீடு செய்ய, அப்போது அந்த ஓவியம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என்றும், இதில் ஏசுவை சிலர் கேலி செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது என்றும், இதனைப் பிரபல பிரெஞ்சு ஓவியர் சிமாபு வரைந்தார் – என்பதும் கண்டறியப்பட்டன.
சிமாபுவின் மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்றான இது பலகாலம் முன்பு காணாமல் போயிருந்தது, தற்போது மீண்டும் கிடைத்துள்ளது. இந்த ஓவியத்திற்கு 6 மில்லியன் பவுண்டுகள் விலை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டதால், இதை ஏலத்தில் விட உரிமையாளர் உடனே சம்மதித்தார்.
ஆனால் அந்த ஏலத்தில் இந்த ஓவியம் 4 மடங்கு அதிகமான தொகைக்கு, அதாவது 24 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத் தொகை இந்திய மதிப்பில் 2, 200 கோடிக்கு சமமான தொகையாகும். இதனை வெளிநாட்டு சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.
இந்த ஏலத்தையடுத்து பிரான்ஸ் நாட்டின் அரசு இந்த ஓவியத்தை ஆராய்ந்து, இதனை தேசியப் பொக்கிஷமாக அறிவித்தது. இதனால் இதைப் புதிதாக வாங்கிய நபரால் இதை பிரான்சுக்கு வெளியே எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்த ஓவியத்தின் உரிமையாளரிடமிருந்து உரிய தொகை கொடுத்து தாங்களே இந்த ஓவியத்தை வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
பலகாலமாக ஒரு வீட்டின் சமயலறையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு ஓவியம் தற்போது ஒரு நாட்டின் பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டு உள்ள செய்தி இணைய உலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post