நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்லும், நாமக்கல் மாணவி அபிநயாவிற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.
நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான அபிநயா அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்று அதில் கேட்கப்பட்ட 54 கேள்விகளுக்கும் விடையளித்துச் சிறந்த திறனாளர் எனச் சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால் அபிநயாவிற்கு விண்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. முதல் 3 இடங்களில் மாணவி தேர்வு பெறாததால் தனது சொந்தச் செலவிலேயே மாணவி நாசா செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், நாசா செல்வதற்கு தனக்கு நிதியுதவி அளிக்கும்படி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவி கோரிக்கை மனு அளித்திருந்தார். இது குறித்து அறிந்த அமைச்சர் தங்கமணி, நாமக்கல் வழியாகப் பிரசாரத்திற்கு வந்தபோது, மாணவி அபிநயா மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிதியுதவி அளித்த அமைச்சருக்கும் மாணவி மற்றும் அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post