அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பொதுமக்கள் பங்களிப்புடன் நீர் வள நிர்வாகத்தை வலுப்படுவதற்காக, அடல் பூஜல் யோஜனா திட்டத்தை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத், அரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 78 மாவட்டங்களில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட ஊராட்சிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தையும் அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் சேர்க்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு குடிமராமத்து திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழகத்தில் ஆயிரத்து 166 பிர்காக்களில் 541 பிர்காக்களின் நிலத்தடி நீர் வளம் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்ட பருவமழை மாற்றமும் நிலத்தடி நீர் குறைந்ததற்குக் காரணமாக அமைந்தது எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நிலத்தடி நீர் வள நிர்வாகத்தை வலுப்படுத்தும் திட்டமான, அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post