சென்னை, பாரிமுனையில் 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த புகாரில் தலைமறைவான 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எம்.பி.கே நகர் பகுதியை சேர்ந்த முகமது அபூபக்கர் சித்திக் என்பவர் தனது அலுவலகத்திலிருந்து 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருசக்க வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பணத்தை பறித்து தப்பியோடியது. இந்நிலையில், ஜூஸ் கடை நடத்தி வந்த தர்மதுரை என்பவர் பாதிப்பணத்தை தனது வீட்டில் வைத்துக்கொண்டு, மீதியினை கீழே கிடந்ததாக கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தர்மதுரையின் வீட்டில் 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள பணத்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எடுத்து சென்றதாக தர்மதுரை வாக்குமூலம் அளித்தார். அதன்படி, 3 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அபூபக்கர் சித்திக்கிடமிருந்து பணப்பையை பறித்து சென்ற 7 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பணத்தை பறித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Discussion about this post