இந்திய அணியின் வெற்றி கேப்டனான மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் உலகில் தனது 15 வருட பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2004 ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன தோனி, முதல் போட்டியிலேயே 1 ரன் கூடு எடுக்காமல், ரன் அவுட் ஆனார். பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி தனது அதிரடியை காட்டினார். அந்த போட்டியில் 183 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இதுவரை அவர் வைத்துள்ளார்.
இதனையடுத்து, 2007 ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற தோனி, அதே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் வாரியம், முதல் முறையாக நடத்திய டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி தட்டிச் சென்றது. அதன்பிறகு, பல்வேறு வெளிநாட்டுத் தொடர்களையும் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து, அவரது தலைமையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய அணி, பலம் பொருந்திய இலங்கை அணியை எதிர்கொண்டது.
275 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணி, சேவாக், சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் தோனி, கவுதம் காம்பீருடன் கைக்கோர்த்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அந்த போட்டியின் இறுதியில் 97 ரன்கள் குவித்த தோனி, போட்டியை வெற்றிகரமாக சிக்சருடன் முடித்துவைத்த நிகழ்வு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் மறையாத வடுவாக பதிந்தது. இதனால், 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலக கோப்பையை கையில் ஏந்தும் பாக்கியம் கிடைத்ததற்கு தோனியே காரணமாகும்.
அதேபோல் சாம்பியன் டிராபி கோப்பையையும் தோனி தலைமையிலான அணி 2013 ஆம் ஆண்டு வென்று சாதனை படைத்தது. அதன் பின்னர் ஐ.சி.சி யின் மூன்று விதமான போட்டிகளிலும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என அழைக்கப்பட்டார் தோனி.
2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்த கேப்டன் தோனி, 2015ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆனார். தோனி களத்தில் நின்றிருந்தால் அன்றைய ஆட்டம் நமது வசமாயிருக்கும் என நினைக்காத இந்தியர்களே இல்லை எனலாம். அதன்பிறகு, சர்வதேச போட்டிகளில் களமிறங்காமல் இருக்கும் தோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்கள் எடுத்துள்ளார், இதேபோல், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,432 ரன்களும், 98 இருபது ஓவர் போட்டிகளில் 1,617 ரன்களும் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக 829 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தோனி ஸ்டெம்ப் பின்புறம் இருக்கும் போது கிரீஸை விட்டு வெளியேற வேண்டாம் என்று வீரர்களுக்கு, ஐ.சி.சி. எச்சரித்துள்ளது. அந்தளவிற்கு, மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்பவர் என்று அழைக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் இவர் 229 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் துறையில் தனது 15 வருட பயணத்தை இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இனி, அவரது கிரிக்கெட் பயணம் தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
Discussion about this post