உலகின் முதல் நாடாக, விண்வெளி பாதுகாப்பு படையை உருவாக்கியுள்ளது அமெரிக்கா.அமெரிக்காவைப் பொறுத்தவரை ராணுவம், கப்பல் படை, விமானப்படை, நீர்மூழ்கிக் கப்பல் படை மற்றும் கடலோர கண்காணிப்புப் படை என்ற ஆறு பாதுகாப்புப் படைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுடன் தற்போது விண்வெளி பாதுகாப்புப் படையும் புதிதாக இணைந்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை யாரும் விண்வெளிப் படையை உருவாக்கியதில்லை முதல்முறையாக அமெரிக்க அதை செயல்படுத்தியுள்ளது.
வருங்காலத்தில் ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் போருக்கு விண்வெளியே சிறந்த களமாக இருக்கக் கூடும் என்பதால் இந்த படை உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகளில் 16,000 வீரர்களைக் கொண்ட மிகச் சிறிய படையாக இது செயல்படவுள்ளது. நாட்டின் எல்லை கண்காணிப்பு, தேசியப் பாதுகாப்பு, சர்வதேச தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் பாதுகாத்தல் போன்ற பணிகளை இந்த படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.
அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு புதிதாக விண்வெளிப் படை உருவாக்கப்பட்டுள்ளது” என விண்வெளி படையின் அறிமுக விழாவில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பெரிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாம் கூடியுள்ளோம், வருங்காலத்தில் விண்வெளியில் இன்னும் நிறைய விஷயங்கள் நடக்கவுள்ளன. ஏனெனில் எதிர்காலத்தில் உலகின் புதிய போர்க்களமாக விண்வெளி அமையவுள்ளது.
உலகில் முதல்முறையாக நாம்தான் விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளோம். நமது தேசியப் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் மிக விரைவில் அவற்றை முறியடித்து முன்னிலை வகிப்போம். ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், நம் நாட்டை காக்கவும் விண்வெளிப் படை உதவும்” எனக் கூறியுள்ளார்.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தினாலும் அங்குத் தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. அதனால் தற்போது அமெரிக்கா உருவாக்கியுள்ள விண்வெளிப் படை குறித்து ரஷ்யா அதிருப்தி தெரிவித்துள்ளது.
Discussion about this post