கட்டாக்கில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷை ஹோப் 42 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். ரோஸ்டன் சேஸ் 38 ரன்களுக்கும், ஹெட்மேயர் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து நிகோலஸ் பூரனுடன் கேப்டன் பொல்லார்ட் கைக்கோர்த்தார். விக்கெட் விழாமல் அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 135 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர்.
நிகோலஸ் பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், 50 ஓவர் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் சைனி மட்டும் 2 விக்கெட் கைப்பற்றினார். தாகூர், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 316 ரன்கள் வெற்றியை நோக்கி இந்திய அணி வீரர்கள் களமிறங்கி விளையாட உள்ளனர்.
Discussion about this post