கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ஆம் தேதி நாடு முழுவரும் கொண்டாடப்படுகிறது. புதுவையில் உள்ள தனியார் சாக்லெட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி பிரம்மாண்டமாக பல உருவங்களில் சாக்லெட் சிலைகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டு, இந்திய விமானப் படை கமாண்டா் அபிநந்தனை கவுரவிக்கும் விதமாக 321 கிலோ எடையில் அவரது உருவம் பதிந்த சாக்லெட் சிலையை உருவாக்கி உள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படையினர், ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். அப்போது இந்திய விமானப்படை கமாண்டா் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர் தாயகம் திரும்பிய அபிநந்தன் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். தற்போது, அவரது உருவம் சாக்லெட் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியமில் இருந்து கொண்டுவரப்பட்ட சாக்லெட்டை வைத்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 5 அடி உயரம் மற்றும் 10 அங்குலத்தை கொண்டுள்ளது. இங்கு, பணிபுரியும் ஊழியர் ஒருவரின் கடின உழைப்பால் தயார் ஆன இந்த சிலை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அவர் வடிவமைக்க 124 மணி நேரம் எடுத்துக் கொண்டார்.
கடந்த காலங்களிலும் மகாத்மா காந்தி, சுதந்திர தேவி சிலை, மிக்கி மவுஸ், அப்துல்கலாம் உள்ளிட்ட சாக்லெட் சிலைகளை உருவாக்கி அவர் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post