பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரப், இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், அவரது உடலை 3 நாட்களுக்குப் பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என, சிறப்பு நீதிமன்றம், தனது தீர்ப்பில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முசாரப், 1999ஆம் ஆண்டு, நவாஸ் செரீப் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் அதிபரானார்.
2008-ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருந்தபோது, இருமுறை அரசமைப்புச் சட்டத்தை முடக்கினார். 2007ஆம் ஆண்டு நெருக்கடி நிலையைப் பிறப்பித்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற அமர்வு, முசாரப்புக்கு மரண தண்டனை விதித்தது.
ஒருவேளை அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், அவரது உடலைக் கொண்டு வந்து, இஸ்லாமாபாத்தின் ஜனநாயக சதுக்கத்தில் 3 நாட்களுக்குத் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெஷாவர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வக்கார் அகமது சேத் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தீர்ப்புக்கு, பொதுமக்களிடமும், ராணுவத்திடமும், அரசிடமும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள சட்ட அமைச்சர் பரூக் நசீம், நீதிபதி சேத் மனதளவில் அந்தப் பதவிக்குப் பொருத்தமில்லாதவர் என்றும், இத்தகைய தண்டனை பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, பாகிஸ்தான் அரசே தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பால், ராணுவத் தலைமை பெரிதும் கோபமடைந்துள்ளது. இதையடுத்து ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தத் தீர்ப்பு, நாகரிகத்திற்கும், மதத்துக்கும் எதிரானது என ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார். தீர்ப்பளித்த நீதிபதியை நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post