யூ டியூப் மூலம் அதிக வருவாய் பெரும் நபர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரயான் முதலிடம் பெற்று உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இதழான போர்ப்ஸ், இந்த ஆண்டில் யூடியூப் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதித்த நபர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரயான் காஜி. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டிலும் ரயான்தான் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ரயான் காஜி 3 வயது சிறுவனாக இருந்தபோது ‘ரயான் டாய் ரிவ்யூ’ என்ற அவரது யூ டியூப் சானல் ஆரம்பிக்கப்பட்டது. ரயானின் பெற்றோர் இதற்குப் பெரிதும் துணையாக இருந்தார்கள். முதலில் பெரிதாக எந்த சாதனைகளையும் செய்யாத இந்த யூ டியூப் சானலில் ரயான் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் குறித்த தனது விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். பின்னர் இந்த யூ டியூப் சானலுக்கு திடீரென அதிக பார்வையாளர்கள் வரத் தொடங்கினர். இதனால் குழந்தைகளுக்கான விளம்பரப் பொருட்களின் சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக ரயான் மாறினார்.
அவரது யூடியூப் தொலைக்காட்சியும் ‘ரயான்’ஸ் வேர்ல்டு’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. அவருக்கு யூ டியூப் விளம்பரங்கள் மூலமும், விளையாட்டுப் பொருட்களின் நிறுவன விளம்பரங்கள் மூலமும் வருமானம் குவியத் தொடங்கியது. இது தவிர பல தொடர்களிலும் ரயான் தலைகாட்டத் தொடங்கினார். இப்போது ரயானின் யூ டியூப் சானலுக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் ரயானின் யூ டியூப் வருமானம் 17 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாயாக இருந்தது, இந்த ஆண்டு அது 20 மில்லியன் பவுண்டுகள் அதாவது 185 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே யூ டியூபில் ஒருவர் பெரும் அதிகபட்ச வருவாய் ஆகும். வரும் ஆண்டு முதல் யூ டியூபில் கோப்பா சட்டம் – எனப்படும் புதிய சட்டம் அமலாக உள்ளதால், ரயான் போன்ற சிறுவர்களுக்கான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் வருவாய் பெருமளவில் குறைய உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவல்.
Discussion about this post