சென்னை 17வது சர்வதேச திரைப்பட விழா சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படுகின்றன. மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர்12ம் தேதி தொடங்கியது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.
இந்தோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் சார்பில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் மொத்தம் 55 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேலான படங்கள் திரையிடப்படுகின்றன.
இதில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் திரையிட ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லு கருப்பட்டி’ மற்றும் ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியன் பனோரமா பிரிவில், ‘அமோரி’ என்ற கொங்கனி மொழிப்படம், ‘ஜாவி தி சீட்’ என்ற அசாமியப் படம், ‘நேதாஜி’ என்ற இருளர் மொழிப் படம் ஆகிய மூன்று படங்கள் முதல் முறையாகத் திரையிடப்படுகின்றன.
ஜெர்மனி, பிரன்ச் , தென் கொரியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 130 படங்கள் தினமும் திரையிடப்படுகின்றன.
சர்வதேச படங்களை பார்க்க தினமும் பல ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். சினிமா துறை மாணவர்கள், கல்லூரி
மாணவர்கள், திரைப்பட கலைஞர்கள், பிற துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் தினமும் படங்களை ரசித்து பார்க்கின்றனர். தினமும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன.
பல்வேறு நாடுகளின் மொழி, கலாச்சாரம், அங்குள்ள பிரச்னைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த சர்வதேச திரைப்பட விழா பயனுள்ளதாக இருப்பதாக சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்தியப் படங்கள் தான் அதிக உணர்வுப் பூர்வமாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் மற்ற மொழிகளிலும் உணர்வை வெளிப்படுத்தும் படங்கள் உள்ளதை இங்கு வந்த பிறகு தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் தேவி, தேவி பாலா, காசினோ, அண்ணா, ரஷ்சியன் கலாச்சார மையம் உள்ளிட்ட 6 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிப்பது வழக்கம். 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் வழங்கினார்.
சென்னை திரைப்பட திருவிழா சினிமா ரசிகர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் திரைப்பட விழா உதவுகிறது.
Discussion about this post