மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயிக்கும் பலரும் காலம் செல்லச் செல்ல அந்த இலக்கிலிருந்து பின்வாங்குகின்றனர். அனைத்து திறமைகளும் இருந்தாலும் உழைப்பு இல்லாவிட்டால் வெற்றி எட்டாக் கனி தான். கடின உழைப்புடன் வெற்றியை எட்டிப் பிடித்த சிறுமி
சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் சேர்ந்த லி – ஈ – ஈ ((ly yi yi)) என்கிற ஆறு வயது சிறுமி டேபிள் டென்னிஸ் பயிற்சி பெறும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் வீடியோவைப் பகிர்ந்தனர். கோடை விடுமுறை பயனுள்ள விதமாக மாற்ற விரும்பிய லி ஈ ஈயின் பெற்றோர் அவரை டேபிள் டென்னிஸ் பயிற்சியில் சேர்த்துள்ளனர். மற்ற குழந்தைகளை விட லி ஈ ஈ திறமையாக விளையாடுவதைக் கண்ட அவரது பயிற்சியாளர் அவருக்கு தனிக்கவனம் செலுத்தி பயிற்சிகளை மேலும் அதிகரித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கடினமான பயிற்சிகளைத் தாங்காது கண்ணீர் சிந்திய அச்சிறுமிக்கு சிறிதளவும் கருணை காட்டாத பயிற்சியாளர் என் முன்னால் நின்று அழ வேண்டாம் எனவும் திரும்பி நின்று அழுமாறும் கூறுகிறார். தங்கள் செல்ல மகளின் அழுகையை கண்டு வருந்தினாலும் மகளின் வளர்ச்சிக்காக பெற்றோரும் அமைதியாக நிற்கின்றனர்.
இவ்வாறு சுமார் ஒரு வருட காலம் பயிற்சி பெற்ற லி ஈ ஈ , தன் வயது பிரிவினருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் கடினமாக உழைத்ததன் பலன் கிடைத்த சந்தோஷத்தில் அச்சிறுமி துள்ளிக் குதிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இச்சிறுமியினை 3 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர்.
இந்த சிறுமி ஜப்பானின் உலகப் புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனையான ஃபுக்குகராவைப் போன்று சாதனை படைப்பார் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
இதுபோன்ற கடினமான பயிற்சிகள் காரணமாகவே சீனா ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருகிறது. வாழ்வில் மிக உயரிய இலக்குகளை நிர்ணயிப்பவர்கள் எந்தவிதமான இக்கட்டான சூழலிலும் பின்வாங்காது லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம் என்பது தான் சிறுமி உலகுக்கு உணர்த்தும் செய்தியாக உள்ளது.
Discussion about this post