தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்ப முயன்ற 6 இலங்கை அகதிகள், தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனுஷ்கோடி எம்.ஆர் சத்திரம் அருகே சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த ஆறு பேரை பிடித்து விசாரணை செய்தனர். இரண்டு பெண்கள் ஒரு குழந்தை உட்பட ஆறு பேரும், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் என விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள், சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில், கள்ளதோணியில் இலங்கைக்கு தப்பிச் செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, பாஸ்போர்ட், இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கிக் கணக்கு அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post