சொத்து விவகாரத்தில் தொழிலதிபரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு உட்பட அவரது கூட்டாளிகள் 9 பேர் மீது சென்னை யானைக்கவுனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் ஜெயின், மின்ட் பகுதியில் நீதிமன்றத்தால் ஏலம் விடப்பட்ட 12 கடைகள் கொண்ட கட்டடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இதற்கு முறைப்படி தலைமைப் பதிவாளர் சான்றிதழும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், அந்த கட்டடத்தில் உள்ள 12 கடைகள் நடத்தி வரும் அதன் உரிமையாளர்களிடம், 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ராஜ்குமார் ஜெயின் கூறியதை அடுத்து, அனைவரும் கடையை காலி செய்ததாக தெரிகிறது. இதில் கண்பத்லால் என்பவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ராஜ்குமார் ஜெயினை மிரட்டியதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்கு பயந்த ராஜ்குமார், 25 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால், கண்பத்லால் தனது உறவினர்களின் உதவியோடு, துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவை நாடியுள்ளார். இதையடுத்து ராஜ்குமார் ஜெயினனை தனது அலுவலகத்திற்கு அழைத்து திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மிரட்டி உள்ளார். ஒரு கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் ராஜ்குமார் ஜெயினை திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மிரட்டியுள்ளார். இதனால், கலக்கமடைந்த தொழிலதிபர் ராஜ்குமார் ஜெயின், கடந்த மே மாதம் 35 லட்சத்தை கொடுத்துள்ளார். 35 லட்சத்தை பெற்றுக் கொண்ட திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, வழக்கறிஞர்கள் சிலருடன் சேர்ந்து மேலும் பணம் கேட்டு தொழிலதிபர் ராஜ்குமார் ஜெயினை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். பணம் தராததால், சேகர்பாபு உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் ராஜ்குமார் ஜெயின் தனது நகைக்கடையில் நகைகளை திருடியதாக யானைகவுனி காவல்நிலையத்தில் கண்பத்லால் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையடுத்து ராஜ்குமார் ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமினில் வந்த அவரை, மீண்டும் தொடர்பு கொண்ட திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு, பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். ராஜ்குமார் ஜெயின் மீண்டும் 5 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். சேகர்பாபுவின் தொடர் பணம் கேட்டு மிரட்டி வந்ததால், பாதுகாப்பு கேட்டு ராஜ்குமார் ஜெயின், யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு, அவரது கூட்டாளிகள் மற்றும் வழக்கறிஞர்களான சந்துரு, சரவணன், நடராஜன், மகேந்திரன், ரன்கா, தர்மேஷ், அன்கிட் பாபேல், கண்பத்லால் உள்ளிட்ட 9 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post