தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆளும் அம்மா அரசு, இதோ கலைந்து விடும், அதோ கலைந்து விடும் என்று ஆருடம் சொன்ன ஸ்டாலின் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நினைப்பில் தான் சுற்றி வருகிறார்.அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்கிற நிலையில் தான் திமுக கட்சி இருக்கிறது. நீங்கள் தான் அடுத்த முதல்வர் என சுற்றி இருப்பவர்கள் உசுப்பேற்றி விட முதல்வர் கனவிலேயே மிதக்கும் ஸ்டாலினுக்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்களின் நிலை குறித்து தெரியவா போகிறது. திராவிட கட்சி என்ற நிலையில் இருந்து திமுக , கார்ப்பரேட் கட்சியாக மாறி எவ்வளவோ வருடங்களாகி விட்டது. ஆனால் இதை சற்றும் உணராத திமுக தொண்டர்கள், ஸ்டாலின் நம்மை அரவணைத்து செல்வார் என ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும் வரிசையில் காத்திருந்தது தான் மிச்சம்.
சரியான நேரத்தில் தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இத்தனை ஆண்டு காலம் தள்ளிப் போனதற்கு மிக முக்கிய காரணம் திமுகதான். ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிப்பின் போதும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி தேர்தலை தள்ளி போட நீதிமன்றத்தை அணுகி, மக்கள் நலப்பணிகளை ஆற்ற விடாமல் தடுத்த திமுகவின் சதித்திட்டங்களை முறியடித்து ஆளும் அதிமுக அரசு நீதிமன்றத்தில் வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் இப்போதும் கூட ஏதாவது ஒரு காரணத்தை வைத்து தேர்தலை ஒத்திவைத்துவிடலாம் என்ற நப்பாசையில் நீதிமன்ற கதவை திமுக தட்ட, உச்சநீதிமன்ற நீதிபதிகள், திமுகவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு திமுகவிற்கு கொட்டு வைத்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஒரு தெளிவுரை வேண்டும் என்று திமுக சொன்ன போது இந்தியாவின் தலைமை நீதிபதி , நீங்கள்(திமுக) தேர்தலை நடத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. நாங்கள் தெளிவான விசாரணை செய்து தான் தீர்ப்பை வழங்கி இருக்கிறோம் என்று திமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் மிக கண்டிப்போடு சொல்லி இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,மக்களை சந்திக்க திராணியில்லாத, தேர்தலை சந்திக்க வக்கில்லாத திமுக தற்போது தேர்தல் ஆணையத்தை அவமதிப்பு வழக்கு தொடர்வோம் மிரட்டி வருகிறார்கள். அம்மாவின் அரசை தேர்தலில் சந்திக்க அச்சப்படுகின்ற திமுக, நல்ல தெளிவான வழக்கறிஞர்களை கொண்டு தீர்ப்பை ஒழுங்காக படித்து பார்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
திமுகவின் இந்த நடவடிக்கைகள் மக்களை சந்திக்க அக்கட்சிக்கு தைரியமில்லை என்பதையே காட்டி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க,பணம் இருப்பவர்கள் மட்டுமே திமுகவில் பதவிக்கும் அதிகாரத்திற்கும் வர முடியும் என்பதை அக்கட்சி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் ரகுபதி , திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆலவயல் சுப்பையா என்பவர், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது மகன் முரளிதரனுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதற்கு ரகுபதி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ எழுதிய கடிதம் அக்கட்சித் தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தியதுடன் குழப்பத்தையும் விளைவித்துள்ளது.தன் கட்சிக்குள்ளே நடக்கும் அநியாங்களை தட்டி கேட்க முடியாத ஸ்டாலினா தமிழக மக்களின் குறைகளை தீர்க்க போகிறார் ? முதலில் தன் கட்சியில் நடக்கும் பஞ்சாயித்துக்களை ஸ்டாலின் முடிக்கட்டும். அதற்கு பிறகு ஊரில் நடக்கும் பிரச்சனைகளை பேசட்டும் என்பதே ஒவ்வொரு உடன்பிறப்பின் கனவாக இருக்கிறது. ஆனால் இது கனவாகவே மட்டும் தான் இருக்கபோகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
Discussion about this post